சனி, ஞாயிறு இறைச்சிக் கடைகளுக்கு தடை; மதுரையில் இன்றைக்கே அலைமோதிய மக்கள் கூட்டம்  

சனி, ஞாயிறு இறைச்சிக் கடைகளுக்கு தடை; மதுரையில் இன்றைக்கே அலைமோதிய மக்கள் கூட்டம்  
Updated on
1 min read

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) இறைச்சி வாங்க கட்டுக்கடங்காமல் மக்கள் குவிந்தனர்.

‘கரோனா’ பரவலைத் தடுக்க தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாட்களில் இரவு நேர ஊடங்கு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் அன்று இறைச்சிக் கடை விற்பனைகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால், மக்கள், கடந்த சில வாரமாக சனிக்கிழமை மீன், மட்டன், சிக்கன் இறைச்சி வாங்க இறைச்சிக் கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மதுரையில் எந்த நோக்கத்திற்காக இறைச்சிக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாமல் மாறாக சனிக்கிழமைகளில் இறைச்சிகடைகளில் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அலைமோதியது.

அதனால், மீண்டும் இறைச்சிக் கடைகள் மூலம் கரோனா பரவும் வாய்ப்பு அதிகரித்தது. அதனால், இந்த வாரம் முதல் சனிக்கிழமையும் இறைச்சி கடைகளுக்கு தமிழக அரசு விதித்தது.

ஆனாலும், மக்கள் ’மனம் தளராமல்’ இந்த வாரம் வெள்ளிக்கிழமையே இறைச்சி வாங்கி வைத்து சமைத்து சாப்பிட இறைச்சிக் கடைகளில் குவிந்தனர்.

மதுரை நெல்பேட்டை, மாட்டுத்தாவணி, கே.புதூர், தல்லாகுளம், கருப்பாயூரணி உள்ளிட்ட முக்கிய மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள் உள்ள பகுதிகளில் மக்கள் இறைச்சி வாங்க இன்று காலை முதல் குவிந்தனர்.

அனைத்துக் கடைகளிலும் ஏதோ ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் போல் இறைச்சி வியாபாரம் களைகட்டியது. மக்கள் கும்பல், கும்பலாக இறைச்சிக் கடைகளில் நின்று இறைச்சிகளை போட்டிப்போட்டு வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில், ‘‘வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பெயரளவுக்குதான் இறைச்சி வியாபாரம் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில்தான் எங்களுக்கு வருமானமே கிடைக்கும். தற்போது ஞாயிற்றுக்கிழமை தடை விதித்ததால் சனிக்கிழமை அன்று ஞாயிற்றுக்கிழமை போல் வியாபாரம் இல்லாவிட்டாலும் வயிற்றுப்பிழைப்பிற்கு வியாபாரம் நடந்தது.

தற்போது அதற்கும் தடை விதித்து வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இறைச்சி வியாபாரம் நடத்த முடிகிறது. அதனால், வியாபாரம் நடத்தும் நாட்கள் குறைக்கப்பட்டதால் விற்பனையும் வருவாயும் குறைந்துள்ளது.

கரோனா பாதிப்பால் முன்போல் கடல் மீன் வரத்தும் இல்லை. அதனால், அதிக ஆட்களை வேலைக்கு வைத்து கடை நடத்தமுடியவில்லை. ஆட்களை குறைத்துக் கொண்டோம், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in