

வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், பதிவான வாக்குகள் வரும் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக அளவில் பணம் பட்டுவாடா நடைபெற்றதாகவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதுவரை வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு இன்று (ஏப். 30) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணசாமி தரப்பில், பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி அமர்வு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுவது தொடர்பாக, உயர் நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது என, தெரிவித்து வாக்கு எண்ணிக்கைக்குத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக கருதிய நீதிபதிகள், இனி இது போன்று அற்ப காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.