தொழில்நுட்ப ஊழியர்கள் 15 பேருக்குக் கரோனா தொற்று: மதுரை விமான நிலையம் செயல்படும் நேரம் குறைப்பு

தொழில்நுட்ப ஊழியர்கள் 15 பேருக்குக் கரோனா தொற்று: மதுரை விமான நிலையம் செயல்படும் நேரம் குறைப்பு
Updated on
1 min read

மதுரை விமான நிலையத்தில் 15 தொழில்நுட்ப ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் இன்று 30ம் தேதி முதல் விமானம் நிலையம் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டது.

மேலும் ஒரே பணி நேரமாக மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை மட்டுமே விமான நிலையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில வாரங்களாக கரோனா கட்டுப்பாடுகளால் பயணிகள் வருகை குறைந்ததால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த விமானங்கள் போதிய ‘கரோனா’ தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த கடைசி 5 நாட்களில் விமான நிலையத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால், தற்போதுள்ள ஊழியர்களைக் கொண்டு இரண்டு ‘ஷிப்ட்’களில் விமானங்களை இயக்க முடியாது. வழக்கமாக விமான நிலையத்தில் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை விமானங்கள் இயக்கப்படும். தற்போது ஊழியர்களுக்கு கரோனா வந்ததால் இன்று 30ம் தேதி முதல் விமான நிலையம் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே ஒரே ‘சிப்ட்’டாக செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குள் எத்தனை விமானங்களை இயக்க முடியுமோ, அவற்றை மட்டுமே இயக்க விமான நிலையம் முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in