Published : 30 Apr 2021 01:28 PM
Last Updated : 30 Apr 2021 01:28 PM

18-44 வயதானவர்களுக்கு நாளை தடுப்பூசி போடுவது சந்தேகமே; ராதாகிருஷ்ணன்

18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு புதிதாக கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்னும் பெறப்படவில்லை என, ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (ஏப். 30) தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"தமிழகத்தில் கரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற #BedsForTN என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தலாம். மேலும், @104GoTN என்ற ட்விட்டர் கணக்கும் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே ஒன்றரை கோடி கரோனா தடுப்பூசி மருந்துகள் தமிழக முதல்வரின் உத்தரவின்படி ஆர்டர் செய்து பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், இதுவரைக்கும் மத்திய அரசு, புனே நிறுவனத்தின் மூலம் தடுப்பூசி மருந்துகள் எவ்வளவு கிடைக்கும், ஹைதராபாத் நிறுவனத்திலிருந்து எவ்வளவு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது, ஆர்டர் செய்தால் நாளைக்கே வருமா என்ற தகவலை இன்னும் தரவில்லை.

ஏற்கெனவே உள்ள தடுப்பு மருந்துகள் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்காக வைத்திருக்கிறோம். புதிதாக ஆர்டர் செய்துள்ள மருந்துகள் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இதே பிரச்சினை இருக்கிறது. இதனை நாங்கள் ஏன் வெளிப்படையாக சொல்கிறோம் என்றால், நாளை மே 1. மே 1-ம் தேதி 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கினீர்களா என கேட்பீர்கள்.

சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். ஒன்றரை கோடி மருந்துக்கு நாம் ஆர்டர் செய்தாலும், அதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுதான் மற்ற மாநிலங்களின் நிலைமையும். அந்த குறிப்பிட்ட அளவு மருந்தும் நாளைய தினமே பெறப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்ற உண்மைநிலையை பகிர்கிறோம்.

45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சுமார் 68 லட்சம் வந்திருக்கிறது. அதில், 56-57 லட்சம் செலவழித்திருக்கிறோம். மீதம் கையிருப்பில் உள்ளன.

18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு நிறுவனங்களிடமிருந்து கையிருப்பு வந்தால்தான் தடுப்பூசி செலுத்த முடியும். அதனால்தான் நாங்கள் இப்போதே தெளிவுபடுத்த விரும்புகிறோம். இப்போது வரை மருந்துகள் பெறப்படவில்லை".

இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x