வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதி: மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதி: மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிதியை அவர்களின் மறுவாழ்வுக் காக பயன்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிவாரண உதவிகள் வழங்கினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணம் போய்ச் சேருவதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வ அமைப்பினரையும் சேர்த்து அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.

இந்த மனுவை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்து, இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜீவ் ராய் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, இவ்வழக்கில் 7-வது எதிர்மனுதாரராக மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்க்கிறோம்.

மழை வெள்ளத்தின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருங் கிணைந்து செயல்பட்டதாக மத்திய, மாநில அரசுகள் மனுதாக்கல் செய்துள்ளன.

தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அரசுத் தரப்பில் நான்கு வாரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார். மேலும், நிவாரண நிதி உதவி வழங்க விரும்புபவர்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதே உகந்ததாக இருக்கும் என்றும் |அவர் தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் நிதியை அவர்களின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் யசோத் வரதனை நியமிக்கிறோம். விசாரணை 2016-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மழைவெள்ள பாதிப்பு குறித்து சமூக ஆர்வலர் ராஜீவ்ராய் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in