Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை; ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற மருத்துவர் உட்பட 2 பேர் கைது: மேலும் பலர் சிக்குவார்கள் என போலீஸார் தகவல்

கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கிவைத்து ரூ.20 ஆயிரத்துக்கு விற்றது தொடர்பாக மருத்துவர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து, கரோனாதடுப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதற்காக காவல் துறையில் தனிப்படைஅமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரத்தில் வாகனத் தணிக்கையில் சிவில் சப்ளைஸ் சிபிசிஐடி எஸ்.பி. சாந்தி தலைமையிலான போலீஸார் நேற்று ஈடுபட்டனர். அப்போது, ஒருகாரை மறித்து சோதனை செய்தபோது, அதில் கரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த காரில் வந்த மருத்துவர் இம்ரான் கானைபோலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மருத்துவரின் நண்பர் விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சிவில் சப்ளைஸ் சிபிசிஐடி எஸ்.பி. சாந்தி கூறியதாவது:

சென்னை புறநகர் பகுதியில்ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை அருகில் ஒரு காரை மடக்கி சோதனை செய்தோம். அதில் மருத்துவர் இம்ரான்கான் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை வைத்திருப்பது தெரியவந்தது.

திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் இருந்து ரூ.4,700 மதிப்புள்ள மருந்தை ரூ.8,000-க்கு வாங்கியதாகவும், தான் அதை ரூ.20 ஆயிரத்துக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் மருத்துவர் தெரிவித்தார். மேலும், சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் அனைவரையும் கைது செய்ய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x