

ஒரத்தநாடு அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(44). இவரது தந்தை முத்துவீரப்பன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, தனது தந்தைக்கு படத் திறப்பு விழா நடத்த திட்டமிட்டிருந்த ரவிச்சந்திரன், அதற்காக மேலமேட்டுப்பட்டி நெடுஞ்சாலையோரம் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்மணிபட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மனைவிவிஜயராணி(55) என்பவர், திருவோணம் அருகே உடப்பவிடுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்கநிகழ்வுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்கு, பேருந்து வசதி இல்லாததால், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவம் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறி வந்துள்ளார்.
மேலமேட்டுப்பட்டி பகுதியில் அவர்கள் வந்தபோது, ரவிச்சந்திரன் வைத்திருந்த பிளக்ஸ் பேனர் திடீரென சரிந்து மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த விஜயராணி மீது விழுந்தது. இதனால், விஜயராணி மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு விஜயராணி உயிரிழந்தார். இந்த விபத்தில் பரமசிவம் காயமின்றி உயிர் தப்பினார்.
பிளஸ்க் பேனர் வைத்தவர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில், திருவோணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சாலையோரம் பிளக்ஸ் பேனர் வைத்த ரவிச்சந்திரனை(44) நேற்று கைது செய்தனர். பேனரும் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலையோரங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விதிமுறைகளை கடைபிடிக்காததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.