Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை: சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தகவல்

சென்னை

சென்னையில் கூடுதலாக 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை சிஐடி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகளை சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த ஆண்டு, கரோனா பரவலின் சிறிய அலை வந்திருந்தது. இப்போது நம்மை நோக்கி சுனாமி அலை போல் வந்துகொண்டிருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் முதலில் மக்கள் பதற்றமடைய வேண்டாம். கரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கூட்டத்திலிருந்து விலகி இருந்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். வீடுகளுக்கு விருந்தாளிகளை அழைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சென்னையில் தற்போது அன்றாட பரிசோதனை 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 31 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கரோனா சிகிச்சை மையங்களில் 2,732 பேர் மட்டுமே உள்ளனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 2,545 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. அடுத்த 10 நாட்களில் மேலும் 2,500 ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் குழாய் இணைப்புகளுடன் கூடிய 500 படுக்கை வசதிகளைக் கொண்ட மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ஐசியு படுக்கை வசதிகளை 1,057-ல் இருந்து 1,377 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 12 இடங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் உள்ளன. மேலும் 9 இடங்களில் பரிசோதனை மையங்கள் திறக்கப்பட உள்ளன. தீவுத்திடல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 24 மணி நேரமும் இயங்கும் பரிசோதனை மையம் அமையவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறும்போது, “சென்னையில் கடந்த ஆண்டு கரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்பு 3 சதவீதமாக இருந்தது. தற்போது 1.4 சதவீதமாக உள்ளது. சென்னையில் 240 மயானங்கள் உள்ளன. வட மாநிலங்களைப் போல இயல்புக்கு மாறான இறப்பு சென்னையில் இல்லை. உடல்களை அடக்கம் செய்ய பணம் கேட்பது தொடர்பாக புகார் வந்தால், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆய்வின்போது, மாநகராட்சி இணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோடம்பாக்கம் மண்டல கள ஒருங்கிணைப்பு அதிகாரி எஸ்.வினித் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x