

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு அருகே திருமணியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார்600 கோடி முதலீட்டில் மத்தியஅரசு நிறுவனமான எச்.எல்.எல்பயோடெக், ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை நிறுவியுள்ளது. குழந்தைகளுக்கான முத்தடுப்பூசி, மஞ்சள் காமாலை தடுப்பூசி, வெறிநாய் தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி போன்ற ஒன்பது வகையான தடுப்பூசிகளை 56 கோடியே 40 லட்சம் டோஸ் அளவுக்கு உற்பத்தி செய்யக்கூடிய உலகதரத்திலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உற்பத்தி தொடங்காத காரணத்தால் அதி நவீன இயந்திரங்களும் உபகரணங்களும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பயனற்ற நிலையில் போடப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் உற்பத்தி தொடங்குமேயானால் மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும்.
கரோனா தடுப்பூசி ஆய்வுக்கும், உற்பத்திக்கும் அனைத்து வசதிகளும் அமைந்துள்ள இந்நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆதரவு அளித்தால், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் கரோனாதடுப்பூசியை மிகக் குறைந்த விலையில் வழங்க முடியும்.
ஆனால், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால் தற்போது இந்நிறுவனம் முடங்கியுள்ளது. அதை செயல்படுத்த வலியுறுத்தி பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் பிரதமரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தார். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நிறுவனத்தை செயல்படுத்தவும் போதிய நிதி ஒதுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கே.சேஷாத்திரி, இ.சங்கர், எஸ்.கண்ணன், கே.பகத்சிங் தாஸ், எம்.கலைச்செல்வி, வி.தமிழரசி, ஜி.புருஷோத்தமன், மு.தமிழ் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.