

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்று தன் காலம் முழுவதும் குரல் கொடுத்தவர் பெரியார். 2001-ம் ஆண்டு இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்ததோடு, ஆகமப் பயிற்சி வகுப்புகள் ஆலயங்களில் அரங்கேறுவதற்கு அடித்தளமும் அமைத்துக் கொடுத்தார்.
2006-ல் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றதும், இந்து சமயத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று அரசாணையை வெளியிட்டார். இதை எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இந்து சமூகத்தில் சாதிகளின் கட்டுமானம் இறுகிக் கிடப்பதற்கும், சாதி வேற்றுமைகள் மேலும் வளர்த்தெடுப்பதற்கும் ஆதரவாக அமைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது.
தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, உண்மையான சமூக நீதிக்கு வழி காண வேண்டும்'' என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.