மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கும் அமுக்கரா சூரணம்: சித்த மருத்துவ அலுவலர் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கவும் அமுக்கரா சூரணத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.

எனவே, கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வீட்டின் தரையை இருவேளை மஞ்சள் நீரால் துடைக்க வேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது, கைகள், கால்கள் மற்றும் முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம். பாதுகாப்பாக நடைபயிற்சி செய்யலாம். துரித உணவு, குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பிஸ்கட், சாக்லெட், குளிர்ந்த நீர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அவசியம்.

நிலவேம்பு, கபசுர குடிநீர்

அனைத்து அரசு சித்த மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இவற்றை ஒருவருக்கு 1 முதல் 2 கிராம் வரை எடுத்து 100 மில்லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 1 முதல் 12 வயது வரை 30 மில்லியும், 12 வயதுக்கு மேல் 60 மில்லியும் இருவேளை குடிக்கலாம்.

மூச்சுத்திணறலை தடுக்க..

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்கவும் அமுக்கரா சூரணத்தை 3 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 250 மில்லி கிராமும், 12 வயதுக்கு மேல் 500 மில்லி கிராமிலிருந்து 1 கிராம் வரையும் எடுத்து தேன் விட்டு குழைத்து உணவுக்கு பின் உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் பாலில் கலந்து உட்கொள்ளலாம். இதேபோன்று சளிக்கு தாளிசாதி சூரணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

காய்ச்சலுக்கு சாந்த சந்திரோதய மாத்திரையை 1 முதல் 12 வயது வரை ஒரு மாத்திரை வீதம் தேன் மற்றும் இஞ்சி சாற்றில் குழைத்து 3 வேளை உணவுக்கு பின் கொடுக்கலாம். 12 வயதுக்கு மேல் 2 மாத்திரை வீதம் 3 வேளை கொடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியத்தை 3 முதல் 12 வயது வரை 5 கிராமும், 12 வயதுக்கு மேல் 10 கிராமும் இருவேளை சப்பி சாப்பிட வேண்டும்.

இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in