ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்

ஊழல் இல்லாத ஆட்சியை வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்
Updated on
1 min read

இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் இனிவரும் காலங்களில் உறுதியோடு மாற்றத்தை உருவாக்கி, ஊழல் இல்லாத நல்ல ஒரு ஆட்சியை நமது தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான மழை, வெள்ள பாதிப்பிற்கு ஆளும் அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை.

அதிமுக அரசு செயல்படாத நிலையில் இளைஞர்களும், தன்னார்வ நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், பெரும் தொழிலதிபர்களும், இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சார்ந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் பெரும் பங்கெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்ககளை தங்களால் இயன்ற அளவு குடிநீர், உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மனிதநேயத்தோடு, உதவிடும் மனதோடு அவர்கள் ஆற்றிய தொண்டு ஈடுஇணையற்றது.

எப்போதெல்லாம் அரசாங்கம் முற்றிலும் செயல்படாமல் செயலிழக்கிறதோ, அப்போது மக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து, தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் நிலைமை தமிழகத்தில் உருவாகியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

சென்னை மாநகரத்தில் மாநகராட்சி என்ற உள்ளாட்சி அமைப்பின் ஆட்சி நடைபெறுகிறதா? மாநகராட்சி மேயர், கவுன்சிலர் என்கிற ஆளும் கட்சி அதிகாரம் படைத்தவர்கள் இருக்கிறார்களா? என்கிற மிகப்பெரிய ஐயம் அனைத்து மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் அதிமுகவை பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறச் செய்ததன் விளைவுதான் இதற்கு காரணம். அதனால்தான் அதிமுக கவுன்சிலர்களும், வட்ட செயலாளர்களும், உதவி செய்பவர்களை மிரட்டி, தாங்கள் செய்ததுபோல் ஜெயலலிதாவின் படத்தையும், கட்சி சின்னத்தையும் வைத்து அதிமுகவினர் செய்ததுபோன்ற நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இது தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. இதன்மீது இதுவரையிலும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வெட்கக்கேடானது. எனவே இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும், இனிவரும் காலங்களில் உறுதியோடு மாற்றத்தை உருவாக்கி, ஊழல் இல்லாத நல்ல ஒரு ஆட்சியை நமது தமிழகத்திற்கு வழங்கவேண்டும்.

இந்த மழை, வெள்ள நிவாரணப்பணியில் தங்களை தாங்களாகவே ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், இளைஞர்களுக்கும் தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த நன்றி'' என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in