

வேலூர் மாவட்டம் தொங்குமலை மலை கிராமத்தில் இருந்து தி.மலை மாவட்டம் நம்மியம்பட்டு இடையில் அமைக்கப்படும் தார்ச்சாலை கையில் பெயர்த்து எடுக்கும் நிலையில் மோசமாக இருப்பதாக மலை கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராம ஊராட்சிகளான பீஞ்சமந்தை, அல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவர்கள், தொழில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வேலூர் மாவட்டத்தை நம்பியுள்ளனர். இந்தப் பகுதிக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இப்பகுதியைச் சேர்ந்த மலை கிராம மக்கள் அருகே உள்ள தி.மலை மாவட்டத்துக்கு உட்பட்டநம்மியம்பட்டு, ஜமுனாமரத்தூர் பகுதிக்குச் செல்ல வனப்பகுதியில் உள்ள மண் சாலையை நம்பியுள்ளனர். எனவே, நம்மியம்பட்டு கிராமத்தை இணைக்கும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வந்தனர். அதன்படி, சுமார் ரூ.7 கோடி மதிப்பில் இரண்டு பிரிவுகளாக பிரித்து தார் சாலை அமைப்பதற்காக வனத்துறை கட்டுமான பிரிவின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பீஞ்சமந்தை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் இருந்து நம்மியம்பட்டு கிராமத்தை இணைக்கும் தார் சாலை பணி சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில், தொங்குமலை கிராமத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட சாலை தரமில்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள் ளது. சாலை அமைப்பதற்கான விதிகளை பின்பற்றாமல் பெயர ளவுக்கு பணிகள் நடைபெறுவதா வும் இந்த சாலை சில நாட்களி லேயே பெயர்ந்து விடும் என்றும் கூறுகின்றனர். மேலும், ஒப்பந்ததாரர் அமைத்த தார்சாலையை கைகளாலேயே பிரித்து எடுக்கும் அளவுக்கு மோசமாக இருப்ப தாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக தொங்குமலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கூறும்போது, ‘‘இங்குள்ள தவளியூர், பெரிய எட்டிபட்டு, சின்ன எட்டிபட்டு, சோனூர், எலந்தம்புதூர், கொண் ராணி, நாயக்கனூர், கோனூர், மூலனூர், நாச்சிப்பட்டு, செங்காடு, புளியமரத்தூர், தேக்குமரத்தூர், தொங்குமலை உள்ளிட்ட மலை கிராமங்களில் விளையும் சாமை, திணை, தேன், கேழ்வரகு உள்ளிட்ட வற்றை ஜமுனாமரத்தூர் சந்தையில் விற்பனை செய்ய வசதியாக இருக்கும் என்பதால் சாலை வசதி கேட்டோம். ஆனால், இவர்கள் அமைக்கும் சாலை ஒரே மாதத்தில் பெயர்ந்துவிடும் அளவுக்கு இருக்கிறது’’ என்றனர்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவ தேஜாவிடம் கேட்டதற்கு, ‘‘இந்த சாலை வனத்துறை கட்டுமான பொறியியல் பிரிவின் சார்பில் அமைக்கப்படுகிறது. எங்கள் தரப்பில் இருந்து எந்தப் பணியும் நடைபெறவில்லை. இந்த சாலை குறித்த தகவல் அந்த பிரிவின ருக்கு அனுப்பியுள்ளோம்’’ என தெரிவித்தார்.
இதற்கிடையில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பில் இருந்து விரைந்து சென்றவர்கள் கிராம மக்களை சமாதானம் செய்ததுடன் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலை மீது மீண்டும் சாலை அமைக்கப்படும் என்பதுடன் மீதமுள்ள பகுதியில் தரமான சாலை அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.