

ஆம்பூரில் ஆம் ஆத்மி கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதைக் கண்டித்து பாஜக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டனர்.
அதன்படி, ஆம்பூரில் உள்ள மேற்கு மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதிகோரி ஆம் ஆத்மி கட்சியினர் போலீஸாரிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதற்கு போலீஸார் அனுமதி மறுத் தனர்.
ஆனால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆம் ஆத்மி கட்சியினர் முடிவு செய்தனர். இந்த தகவலை அடுத்து பாஜக நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகம் முன்பாக திரண்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினரை பாஜகவினர் ஓட,ஓட விரட்டி தாக்கினர். இதில், ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் பிலால், மாவட்டச் செயலாளர் சந்துரு, மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி ஆகியோர் காயமடைந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவம் ஆம்பூரில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. வடக்கு மண்டல ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையில் டிஐஜி தமிழ்சந்திரன், காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில்குமாரி (வேலூர்), பொன்னி (திருவண்ணாமலை), முத்தரசி (காஞ்சிபுரம்) ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆம்பூர் நகரின் முக்கிய பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாஜக எஸ்சி பிரிவு மாவட்டத் தலைவர் குப்புசாமி(43), மாதனூர் ஒன்றியத் தலைவர் தேவநாதன்(40) மற்றும் நிர்வாகிகள் நீலகண்டன்(34), ஏழுமலை(40), சீனிவாசன்(44), ராஜேஷ்(44) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.