

வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் கரோனா நோயாளிகள் மூச்சிதிணறிக் கொண்டிருக்கும் நிலையில் மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் நிம்மதியாக ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றனர்.
இதற்கு, முன்கூட்டியே கரோனாவின் இரண்டாவது அலையைத் திட்டமிட்டு மதுரை எம்பி.சு.வெங்கடேசன், அப்போதைய மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய், மாவட்ட கரோனா தடுப்பு அதிகாரி சந்திரமோகன், டீன் சங்குமணி ஆகிய 4 பேரின் கூட்டு முயற்சியால் போதிய ஆக்ஸிஜன் கொள்கலன்கள் அளவை ஏற்படுத்தியதே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ தொற்று நோயால் இதுவரை 29,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும், 400 முதல் 600 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயாளிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தவிர வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் ‘கரோனா’ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்பட 11 கல்லூரிகளில் தற்காலிக தொற்று நோய் மையங்கள் அமைத்து இந்த மையங்களில் அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் 929 கரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.
இதற்காக, ரூ.300 கோடியில் கட்டிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தற்போது ‘கரோனா சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துமவனையாக மாற்றப்பட்டுள்ளது.
மதுரையில் இந்தத் தொற்று நோய் பாதிப்பும், பரவலும் அதிகமாக இருந்தாலும் இந்த நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது.
வடமாநிலங்களில் கரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்குப் போராடுவதும், மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழப்பும் நெஞ்சை பிளக்கும் துயரச் சம்பவங்கள் நடக்கும் நிலையில் மதுரை அரசு கரோனா மருத்துவமனைகளில் போதிய அளவிற்கான ஆக்சிஜன் கொள்கலன்களை முன்னெச்சரிக்கையாக நிறுவி அதன் மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்கிறது.
தினமும் அரசு கரோனா மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் கொள்கலன்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது.
இதன் மூலம் கரோனா நோயாளிகளுக்குத் தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்வதில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமில்லாது இந்தியாவிற்கே மதுரை அரசு கரோனா மருத்துவனைகள் வழிகாட்டியாக திகழ்கிறது.
அதற்கு முன்கூட்டியே தொலைநோக்கு பார்வையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் எம்பி சு.வெங்கடேசன், அப்போதைய மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய், மாவட்ட கரோனா தடுப்பு அதிகாரி சந்திரமோகன், டீன் சங்குமணி ஆகிய நான்கு பேரின் கூட்டு முயற்சியால் போதிய ஆக்ஸிஜன் கொள்கலன்கள் அளவை ஏற்படுத்தியதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:
இன்றைய நிலவரப்படி மதுரை கரோனா சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை மையத்தில் 310 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே நிரம்பிய நிலையில் 538 ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.
அதனால், மதுரையில் தினமும் சிகிச்சைக்கு தீவிர நிலையில் பாதித்த கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டாலும் ஒரு நிமிடம் கூட ஆக்சிஜன் இல்லாத சூழல் ஏற்படவில்லை.
அதனால் ஓர் உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்கும், அவர்களுடைய உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையிலும் ஜீரோ டிலே ( Zero Delay) என்ற சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முறையில் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டுவரப்படும் நோயாளிகள் மருத்துவமனை படுக்கைக்கு கொண்டுசெல்லும் வரை தேவையான ஆக்சிஜனை கொடுக்கும் வகையில் நோயாளிகளை கொண்டுசெல்லும் அனைத்து ஸ்ட்ரெட்சர்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை முறையில் கரோனா மட்டுமில்லாது எந்த நோய்க்கும் உயிருக்குப் போராடும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்திற்கு வந்துவிட்டால் அடுத்த ஒரு நொடிப்பொழுதில் செயற்கை ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கரோனா வேகமாகப் பரவியபோது நிறைய நோயாளிகள், கழிவறைக்குள் செல்லும்போதுதான் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் அங்கு இறப்பது அதிகரித்தது.
அதைத்தடுக்க, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் கழிவறைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கரோனா மருத்துவமனை கழிப்பறைகளிலும் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டன. அது இந்த கரோனா இரண்டாவது அலையிலும் நோயாளிகள் சிகிச்சைக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது, ’’ என்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘மதுரையில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா உச்சமாக இருந்தது. அந்த நேரத்தில் நோயாளிகளைக் காப்பாற்ற ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி கட்டமைப்புகளைப் பலப்படத்த வேண்டி இருந்தது.
மாவட்ட கரோனா சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக சந்திரமோகன் நியமிக்கப்பட்டார். அவர், ஆட்சியர் மற்றும் நான் கூட்டாக ஆய்வு செய்து மதுரை அரசு மருத்துவமனைககளுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவை பல மடங்கு உயர்த்த திட்டமிட்டோம்.
அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6,000 லிட்டர் திரவ ஆக்சிஜனை சேமித்து வைப்பதற்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. 400 படுக்கைகளுக்கு மட்டுமே நேரடியாக ஆக்ஸிஜன் கொடுக்கும் வசதியிருந்தது. தகுந்த ஆய்வுக்குப் பின்னர், கூடுதலாக 700 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டது.
கொள்கலன் அளவு 20 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டது. கரோனா சிகிச்சைக்கு மற்றொரு பிரதான மருத்துவமனையாக மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை செயல்பட்டது.
அங்கு 30 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மட்டுமே இருந்தன. எந்த ஒரு படுக்கைளுக்கும் நேரடியாக ஆக்ஸிஜன் வசதியில்லை. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த சிலிண்டர்களை நிரப்பி கொண்டு வரும் சூழலிலேயே இருந்தது.
அதனால் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 110 படுக்கைளுக்கு ஆக்ஸிஜன் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அங்கு 2 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டது.
அதனால், தற்போது தமிழகத்தில் வேறு எந்த ஒரு மருத்துவமனையிலும் இல்லாத அளவிற்கு மதுரை அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இணைப்புப் படுக்கைகள், ஆக்ஸிஜன் இணைப்பு இல்லாத படுக்கைகளை விட அதிகமாக இருக்கிறது” என்றார்.