Last Updated : 29 Apr, 2021 04:10 PM

 

Published : 29 Apr 2021 04:10 PM
Last Updated : 29 Apr 2021 04:10 PM

வேலூரில் படுக்கை கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருத்த கரோனா நோயாளிகள்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பல மணி நேரம் கரோனா நோயாளிகள் காத்திருந்த சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று புற்றீசல் போல பெருகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 497 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்திருந்தாலும் 2,500-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் கரோனா நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் நாள் தோறும் படையெடுத்து வருவதால் அங்கு படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யப்படுவதால் வசதியற்ற, ஏழை, எளிய மக்கள் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் விரைவாக குணமடைந்து வீடு திரும்பாததால், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களுக்கு படுக்கை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டு முன்பாக 50-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள், அனுமதிக்காக காத்திருக்கும் அவல நிலை கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.

இதை சமாளிக்க முடியாத மருத்துவமனை நிர்வாகம், கரோனா தொற்று தீவிரமடையாத நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி மருந்துகளை சாப்பிட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் கரோனா நோயாளிகளுடன் அவசர சிகிச்சை பிரிவு முன்பு பல மணி நேரம் காத்திருந்தது.

போதிய படுக்கை மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் தாங்கள் காக்க வைக்கப்பட்டதாக கரோனா நோயாளிகள் குற்றஞ்சாட்டினர். இதில், சில நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விட்டு வெளியே இறங்கி வந்து அங்கும், இங்கும் சுற்றிய சம்பவமும் நிகழ்ந்ததால் அங்குள்ள பலருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் செல்வியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

”அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையின், அவசர சிகிச்சை பிரிவில் இன்று (ஏப்.29) காலை காத்திருந்தவர்கள் கரோனா நோயாளிகளே அல்ல. அவர்கள் பொது நோயாளிகள் தான். ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும் போது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான்.

பல்வேறு நோய்கள் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை பரிசோதித்து அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கான வார்டு தேர்வு செய்யப்பட்டு அங்கு அவர்களை அனுப்ப சிறிது நேரம் ஆகும். இது போன்ற சிக்கலால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை சில நேரங்களில் ஏற்படும். இதை தவிர்க்க முடியாது.

மற்றபடி படுக்கைகள் பற்றாக்குறையோ, மருத்துவர்கள் பற்றாக்குறையோ இங்கு இல்லை போதிய அளவு மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கைகளும், மருத்துவர்களும் உள்ளனர்.

மே மாத இடையில் வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் அதற்கு ஏற்றப்படி படுக்கைகளை ஏற்கெனவே அதிகரித்துள்ளோம். ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகளையும் அதிகப்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக கரோனா நோயாளிகள் யாரும் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வர மாட்டார்கள். கரோனா சிறப்பு வார்டுக்கு தான் அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். கரோனா நோயாளிகள் படுக்கை இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருப்பதாக பரவிய தகவல் முற்றிலும் தவறானது. இதில் துளிக்கூட உண்மை இல்லை’’.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x