Last Updated : 29 Apr, 2021 04:05 PM

 

Published : 29 Apr 2021 04:05 PM
Last Updated : 29 Apr 2021 04:05 PM

மூதாட்டியின் நிலத்துக்கு உரிய இழப்பீடு; 27 ஆண்டுகள் வழக்கை முடித்துவைத்த கோவை நீதிமன்றம்

பிரதிநிதித்துவப் படம்

கோவை

மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி உத்தரவையடுத்து, மூதாட்டியின் நிலத்துக்கு வீட்டு வசதி வாரியம் உரிய இழப்பீடு அளித்ததால், வழக்கை முடித்து வைத்து கோவை சார்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (90). இவருக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 1983-ம் ஆண்டு செப்டம்பரில் வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்காததால், அவர் 1994-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இறுதியாக, நிலத்துக்கு இழப்பீடாக வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.67.87 லட்சத்தை 2021 மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை வீட்டுவசதி வாரியம் நிறைவேற்றாததையடுத்து, சரஸ்வதியம்மாள் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, கடந்த 21-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட சொத்துகளையும், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ, கார், ஜீப் உள்ளிட்ட சொத்துகளையும் பறிமுதல் செய்யவும், கோவை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை பூட்டி சீல் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஏப். 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "வருமான வரி பிடித்தம் போக, கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சார்பில், மொத்தம் ரூ.62.15 லட்சம் இழப்பீடாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் மனுவை முடித்துவைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x