3,000 சதுர அடி உள்ள கடைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்க அரசு அனுமதிக்காவிட்டால் போராட்டம்: வணிகர் சங்கம் அறிவிப்பு

வேலூரில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஞானவேலு பேசினார்.
வேலூரில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஞானவேலு பேசினார்.
Updated on
1 min read

மூன்றாயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வேலூர் மாவட்ட வியாபாரிகள், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தினந்தோறும் அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இது வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, கடந்த ஆண்டு பிறப்பித்த முழு ஊரடங்கு காரணமாக வியாபாரம் நலிந்துவிட்டதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த வியாபாரிகள், அதன் பிறகு ஏற்படுத்தப்பட்ட தளர்வுகள் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக வியாபாரத்தை விரிவுபடுத்தி வந்தனர். இந்நிலையில், கரோனா 2-அலை நாடு முழுவதும் வேகமெடுத்து வருவதால் தமிழகத்தில் பெரிய கடைகளை மூட அரசு அறிவித்த உத்தரவு வியாபாரிகளை நிலைகுலையச் செய்துள்ளது.

இதற்கிடையே, வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் சண்முகனடியார் மண்டபத்தில் இன்று (ஏப்.29) நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஞானவேலு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதை அரசு திரும்பப் பெற வேண்டும்.

* பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது முழுநேர ஊரடங்கை அமல்படுத்தாமல் உள்ளனர். இந்நிலையில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூடுவதால் 35 சதவீத ஜிஎஸ்டி வரி வசூல் பாதிக்கப்படும்.

* மளிகைப் பொருட்கள், பெரிய அளவிலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் வீணாகும் நிலை உருவாகிவிடும். அதுமட்டுமின்றி இந்தக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

* அதேபோல 2,500 சதுர அடி உள்ள கடைகளையும் அதிகாரிகள் மூடச் சொல்கிறார்கள். இதுபோன்ற பாரபட்சம் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் மாவட்டத் தலைவர் ஞானவேலு கூறும்போது, ‘‘3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். கரோனா விதிகளைப் பின்பற்றி, கடைகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர அனுமதிக்க வேண்டும்.

கரோனா தொற்று பரவாமல் இருக்க அனைத்து வகையிலும் வியாபாரிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைத் திறக்க அனுமதிக்காவிட்டால் முதற்கட்டமாக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். அதைத் தொடர்ந்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in