

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமனம் செய்தது சரியே என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இருப்பதாகக் கூறி, அவரது நியமனம் சரியே எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், “சுற்றுச்சூழல் விவகார நிபுணர் என்பதற்கு குறைந்தது 5 வருட காலம் சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாண்ட அனுபவம் என்ற விதி கட்டாயமாகும்.
ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 4 ஆண்டுகள் 10 மாதங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கையாண்ட அனுபவம் உள்ளது. அதைக் கணக்கில் கொள்ளாத உயர் நீதிமன்றம், அவரின் நியமனத்தை சரி என்று கூறியுள்ளது. நிபுணர்கள் நியமன விதியை மாற்ற உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை. எனவே இந்த விவாரத்தில் உயர் நீதிமன்றம் சரியான முடிவை எடுக்கத் தவறிவிட்டது.
மேலும், கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதி இல்லை. அவர் அப்பதவியில் தொடருவது என்பது பொதுநலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். எனவே, அவரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் நிபுணத்துவ உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதில்லை என கிரிஜா வைத்தியநாதன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.