தற்போது சுனாமி போல கரோனா அலை வந்துகொண்டிருக்கிறது: தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி பேட்டி

சித்திக்: கோப்புப்படம்
சித்திக்: கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த ஆண்டு கரோனா முதல் அலை சிறிய அளவில் இருந்த நிலையில், தற்போது சுனாமி போல கரோனா அலை வந்துகொண்டிருப்பதாக, கரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் ஐஏஎஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக, சென்னை மாநகராட்சியில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்த குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதையடுத்து, மாவட்டங்கள்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

வணிகவரித் துறை ஆணையர் எம்.ஏ.சித்திக், கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷுக்கு உதவும் வகையில் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்.ஏ.சித்திக் இன்று (ஏப். 29) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"கடந்த ஆண்டு கரோனா அலை சிறியதாகவே இருந்தது. பெரிய அலை அல்ல. இப்போது சுனாமி போல பெரிய அலை நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அடைந்த உச்சத்தை ஏற்கெனவே நாம் இப்போது தாண்டிவிட்டோம். இப்போது பெரிய அலையை எதிர்கொண்டு வருகிறோம்.

அரசு, மாநகராட்சி போன்றவை இதனை எதிர்கொள்ள தக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் வசதிகளை அதிகப்படுத்த பணியாற்றி வருகிறோம். இதனை அரசு தனியாகச் செய்ய முடியாது. பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் இவ்வளவு பெரிய அலையை நம்மால் சமாளிக்க முடியும். மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in