மத்திய தொகுப்பிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. இவை மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் முதல் அலை முடிந்த நிலையில், கரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தன. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் போடப்பட்டது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்குப் போடப்பட்டது. இதில் இலக்கு எளிதாக எட்டப்பட்டது. அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் போடலாம் என அரசு அறிவித்தது.

ஆனால், இந்த முறையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் தடுப்பூசிகள் வீணாயின. நேற்றைய நிலவரப்படி அகில இந்திய அளவில் தடுப்பூசியை வீணடிப்பதில் தமிழகமே முதலிடம். தமிழகத்தில் 8% தடுப்பூசிகள் வீணாவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போதிய விழிப்புணர்வின்மை, மக்களுக்கு இருக்கும் பயம்தான் இதற்குக் காரணம்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடச் சென்றவர்களுக்குத் தடுப்பூசி பற்றாக்குறை எனும் நிலை உருவானது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது முன்பதிவுடன் வருபவர்களுக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையிலும் கோவாக்சின் தட்டுப்பாடு நிலவுகிறது.

சமீபத்தில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. இரண்டு நாட்களுக்கு முன் 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. இன்று 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. இவை மாவட்ட வாரியாகப் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு இதுவரை மொத்தமாக 55 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 8 லட்சத்து 85 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளன. மொத்தம் 63 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறையை நீக்கவும், மே 1 முதல் தொடங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் நடைமுறைக்காக கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்பதற்காகவும் 1.5 கோடி தடுப்பூசிகள் வாங்க தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in