சென்னை வெள்ள மீட்புப் பணிகளுக்கு முப்படைகளை அனுப்புக: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

சென்னை வெள்ள மீட்புப் பணிகளுக்கு முப்படைகளை அனுப்புக: பிரதமருக்கு அன்புமணி கடிதம்
Updated on
2 min read

சென்னையில் வெள்ள மீட்புப் பணிகளுக்காக முப்படைகளையும் அனுப்பக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நீங்கள் நன்றாக அறிவீர்கள். கடந்த 29 ஆம் தேதி வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழக வெள்ள பாதிப்புகள் பற்றி குறிப்பிட்டு பேசியதில் இருந்தே தமிழக மக்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை அறிய முடிகிறது.

சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முதல் இரு கட்டங்களில் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழகமும், தமிழக மக்களும் மீளாத நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மூன்றாம் கட்ட மழை தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 60 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இடைவிடாத மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வெள்ளம் புகுந்ததால் சென்னை விமான நிலையம் நேற்றிரவு முதல் மூடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் தேசிய நெடுஞ்சாலை உட்பட 3 முக்கிய சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் சென்னை தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் கிட்டத்தட்ட 850 குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. தாம்பரம் முடிச்சூர் போன்ற பகுதிகளில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்பதால், அங்கிருந்து வெளியேறமுடியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி ஆகியவற்றில் இருந்து சுமார் 35,000 கன அடி அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆறுகளில் கரைகளில் உள்ள லட்சக்கணக்கான மக்களை மீட்பது சவாலான செயலாக மாறியிருக்கிறது. சென்னையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்வதே சாகசம் மிகுந்த செயலாக மாறியிருக்கிறது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தின் பாதிப்பு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது மாநில அரசால் மட்டுமே முடியும் காரியமாகத் தெரியவில்லை.

சென்னையில் சில இடங்களில் கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த சிலர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இது போதுமானதல்ல. எனவே, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள முப்படை வீரர்களையும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த வீரர்களையும் பெருமளவில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அத்துடன் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடி நிதி உதவியாக ரூ.10,000 கோடியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in