Published : 29 Mar 2014 09:35 AM
Last Updated : 29 Mar 2014 09:35 AM

வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகள் பட்டியலை தயார் செய்கிறது காங்கிரஸ்: ஓட்டுக்கு பணம் கொடுக்க திட்டம் என அதிமுக புகார்

சிவகங்கை தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, மத்திய அரசின் வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்து வருவதாகத் தெரிகிறது.

சிவகங்கை தொகுதியில் இந்தமுறை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை என்றாலும் அவருக்குப் பதிலாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் செந்தில்நாதன், திமுக தரப்பில் சுப.துரைராஜ், பாஜக சார்பில் துணைத் தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

கடந்த தேர்தலின்போதே ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்ததாக இளையான்குடி பகுதி யில் கார்த்தி சிதம்பரத்தின் ஆட்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தமுறை அவரே போட்டியிடுவதால் பணப் புழக்கம் இன்னும் தாராளமாய் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. தேர்தலை கணக்கில் வைத்து ஏற்கெனவே கோயில் திருப்பணிகள், நமக்கு நாமே திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு லட்சங்களை எண்ணிக் கொடுத்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

இந்நிலையில், மத்திய அரசின் வேலை உறுதியளிப்பு (150 நாள் வேலை திட்டம்) திட்டப் பயனாளிகள் பட்டியலை காங்கிரஸ் தரப்பிலிருந்து பஞ்சாயத்து வாரியாக சேகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது எதற்காக இந்தப் பட்டியல் எடுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே விசாரித்தபோது, “வேலை உறுதியளிப்புத் திட்டம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப் படுகிறது. அந்தத் திட்டத்தால் பயனடைந்தவர்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு கடிதம் எழுதி ஓட்டுக் கேட்பதற்காக இந்தப் பட்டியலை எடுக்கிறோம்’’ என்கிறார்கள்.

ஆனால், அதிமுக தரப்பிலோ, ’’கார்த்தியை ஜெயிக்க வைப்பதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடப் போகிறார்கள். ஒரு ஓட்டுக்கு மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை பணம் கொடுக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

நகரங்களைவிட கிராமங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் நம்பிக்கையோடு இருக்கலாம் என்பதால் வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகளின் பட்டியல் தயாராவதாக” தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x