3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் பரப்புள்ள பெரிய கடைகள், ஷோரூம்களை மூட வேண்டும்: தலைமை செயலர் அறிவுறுத்தல்

3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் பரப்புள்ள பெரிய கடைகள், ஷோரூம்களை மூட வேண்டும்: தலைமை செயலர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின்படி 3 ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்குமேல் பரப்பளவுள்ள பெரிய கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20-ம் தேதியில் இருந்து, இரவு நேர ஊரடங்கு,ஞாயிறுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து 26-ம் தேதி முதல், புதியகட்டுப்பாடுகளையும் தமிழக அரசுஅமல்படுத்தியது. அதன்படி,அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைகூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதுதவிர பெரிய கடைகள், வணிக வளாகங்கள், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும், தனியாக செயல்படும் மளிகை உள்ளிட்ட பலசரக்கு,காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி, ஒரே நேரத்தில் 50 சதவீதம்வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரிய கடைகள் என்றால், எந்த அளவுள்ள கடைகள் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அரசிடம் விளக்கம் கோரியிருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, பெரிய கடைகள் என்பது, 3 ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவுள்ள கடைகள், ஷோரூம்களைக் குறிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in