

கரோனா அச்சத்தால் வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்து வருவதால், நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு விரைவு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கரோனா 2-ம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகமாகஇருந்ததால், சில தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 வாரங்களாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் விரைவு ரயில்களின் சேவையும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
தற்காலிகமாக நிறுத்தம்
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா தொற்று அதிகரிப்பால், மக்கள் அத்தியாவசியப் பயணத்தை தவிர மற்ற வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான ரயில்கள் காலியாகவே செல்கின்றன. எனவே, பயணிகள் வருகை இல்லாத வழித்தடங்களில் ரயில்களின் சேவையை ரத்து செய்து வருகிறோம்.
அதன்படி, நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு விரைவு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வருகை அதிகரிக்கும்போது இந்த ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்படும்’’ என்றனர்.