Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்கி வருமாறு நோயாளிகளின் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தாதீர்கள்: தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை வேண்டுகோள்

ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்கி வருமாறு நோயாளிகளின் குடும்பத்தினரை கட்டாயப்படுத்தாதீர்கள் என்று தனியார் மருத்துவமனைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், தொற்றால் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ‘ரெம்டெசிவிர்’ இல்லாததால், வெளியில் சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

அவர்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டை வைத்துக்கொண்டு கடை கடையாக செல்கின்றனர். ஆனால், எந்த மருந்துக் கடைகளிலும் மருந்து இருப்பு இல்லை. கள்ளச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்தின் விற்பனை கடந்த 26-ம் தேதி தொடங்கப்பட்டது. நோயாளிகளின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுடன் வந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர். ஆனால், மருந்தை வாங்க 20 மணிநேரம் வரை வரிசையில் காத்திருக்கவேண்டியுள்ளது. பலர் முதல் நாள்இரவிலிருந்து விடிய, விடிய காத்திருந்து மருந்தை வாங்குகின்றனர்.

தகவலறிந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மருந்து வாங்க மருத்துவமனைக்கு வருகின்றனர். மருந்து வாங்க பொதுமக்கள் குவிந்து வருவதால், போலீஸ் பாதுகாப்புடன் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் டி.எஸ்.செல்வ விநாயகம் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ‘ரெம்டெசிவிர்’ மருந்தைத் தேடிஅலைந்து வருகின்றனர். பொதுமக்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ‘ரெம்டெசிவிர்’ மருந்து உயிர் காக்கும் மருந்து இல்லை. இந்த மருந்தைப் போடுவதால் நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் நாட்கள் குறையும். இந்த மருந்தை போட்டால்தான் கரோனா தொற்றில் இருந்து குணமாகலாம் என்பதில்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சிகிச்சையில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் இந்த மருந்து தேவைப்படுகிறது. ஆனால், நாம் தொற்றுள்ள அனைவருக்கும் தேவை என்பதைப் போல் புரிந்து கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு ‘ரெம்டெசிவிர்’ மருந்து இருப்புள்ளது. தேவையானவர்களுக்கு மட்டும்தான் இந்த மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். மருத்துவமனைகளை நடத்தும் உங்களாலேயே ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. நோயாளிகளின் உறவினர்களிடம் மருந்தை வாங்கி வருமாறு சீட்டு எழுதி கொடுப்பது என்ன நியாயம்.

உங்களாலேயே வாங்க முடியாதபோது அவர்கள் எங்கு சென்று வாங்குவார்கள். இதனால் தேவையில்லாத பதற்றம் ஏற்படுகிறது. தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. ‘ரெம்டெசிவிர்’ மருந்துவிற்பனை மையங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x