வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடு: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகளுக்கு கரோனா பரிசோதனை

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்ட பல்வேறு கட்சிகளின் பூத் ஏஜென்ட்கள். படம்: பு.க.பிரவீன்
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்ட பல்வேறு கட்சிகளின் பூத் ஏஜென்ட்கள். படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணிகள் நேற்று நடைபெற்றன.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே.2-ம் தேதி எண்ணப்படுகின்றன. தற்போது கரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இச்சூழலில் கரோனா பரவல்ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், அதிகாரிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் என அனைவருக்கும் 72 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது, தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

15 மணி நேரத்துக்கு முன்..

வாக்கு எண்ணிக்கைக்கு 15 மணி நேரத்துக்கு முன், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்பவர்களின் பட்டியல் இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி, வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கான கரோனா பரிசோதனைகளை நடத்தினர். தொகுதிதோறும் குறிப்பிட்ட இடத்தை தெரிவித்து, அனைவரும் அங்கு வந்து கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகவர்களில் யாருக்கேனும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அவருக்கு பதில் மாற்று முகவர் என்ற அடிப்படையில் 20சதவீதம் பேருக்கும் கூடுதலாக சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்குட்பட்ட முகவர்களுக்கும் கரோனா பரிசோதனை நேற்று எடுக்கப்பட்டது.

இதுதவிர, வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா பாதுகாப்புக்கு தேவையான வெப்பநிலை அளவிடும் கருவி, சானிடைசர் வழங்குதல், குறிப்பிட்ட இடைவெளியில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அனைத்துவழிமுறைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in