

சின்னகொத்தூரில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை வரலாற்று ஆர்வலர்களுடன் இணைந்து கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகொத்தூரில் முதலாம் குலோத்துங்கனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இதுபிற்கால சோழர்கள் காலத்திய கட்டிட கலை அமைப்பாகும். இந்த ஊர் ஒய்சால மன்னன் வீர ராமநாதனின் குந்தாணி ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்து உள்ளது. இக்கோயிலில் படிஎடுக்கப்பட்ட 15 கல்வெட்டுக்கள் மூலம் கோயிலின் சிறப்பினை நமக்கு தெரிவிக்கிறது. தற்போது, வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோருடன் கிராம மக்கள் இணைந்து பழமையான இக்கோயிலை புனரமைக்கும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும்போது, இங்குள்ள சிவன் கோயில் முதலில் ஏகாம்பரநாதர் கோயில் எனவும், விஜயநகர காலத்தில் கைலாசநாதர் கோயில் எனவும் அழைக்கப்பட்டது. தற்போது குஞ்சம்மாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் மிகவும் பாழடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் இக்கோயிலை சீரமைக்க குழு அமைக்கப்பட்டது.
தற்போது, அக்குழுவினர், கோயிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோயிலில் மேலும் 6 கல்வெட்டுக்கள் உள்ளன. இதனை விரைவில் படி எடுத்து அதன் விவரம் தெரிவிக்கப்படும் என்றார்.
கிராம மக்கள் கூறுகையில் பழமை வாய்ந்த இக்கோயிலின் பழமை மாறாமல் புதுப்பித்து வருகிறோம். மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இக்கோயில் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும். தற்போது, கோயிலின் மேற்பகுதியில் உள்ள பழைய செங்கற்கள் மற்றும் மண் இவற்றினை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்.