

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கலவரத்தை ஏற்படுத்த திமுக திட்டமிட்டு வருவதாகவும், கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அறிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல், நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் ராமு போட்டியிடுகிறார். தேர்தல் முடிந்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக உள்ளதால், இறுதி முயற்சியாக வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த திட்டமிட்டிருப்பதாக எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே எவ்விதமான அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக் கூடாது. காட்பாடி உட்பட தமிழகத்தில் உள்ள எந்த வாக்கு எண்ணிக்கை மையத்திலும் கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற அறிவிப்பை தேர்த்ல ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.