

தாம்பரம் அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான திமுக நிர்வாகியை தேடி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (36). பனங்காட்டு படை கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் (30) மற்றும் தாம்பரம் தொகுதி திமுகவின் சமூக வலைத்தள பொறுப்பாளர் தனசேகரன் ஆகிய இருவரும் கார்த்திக்கின் நண்பர்கள்.
கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் கார்த்திக் பழகி வந்துள்ளார். அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், மது கொடுத்தும் கார்த்திக் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை சிறுமிக்கு தெரியாமல் தனது செல்போனில் கார்த்திக் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இதை தனது நண்பர்களான மணிகண்டன், தனசேகரன் ஆகியோருக்கு காண்பித்துள்ளார். இதைத் தொடந்து நண்பர்களுடன் சேர்ந்து சிறுமிக்குமது கொடுத்து கடந்த 2 ஆண்டுகளாக வீட்டின் அருகில் உள்ள காப்பு காட்டிலும் தனசேகரனின் அலுவலகத்திலும் வைத்து கூட்டு பலாத்காரத்தில் கார்த்திக் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். அப்போது சிறுமியிடம் ‘உன் அம்மாவைக் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டி, அவரைக்கருக்கலைப்பு செய்ய வைத்தனராம். அதன்பிறகும் சிறுமியை தொடர்ந்து மிரட்டி தங்கள் விருப்பத்துக்கு இணங்க வைத்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் அம்மாவிடம் சிறுமி கதறி அழுதிருக்கிறார். அதன்பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மூலம் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்து உள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கார்த்திக், மணிகண்டனை நேற்று கைது செய்தனர். பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தனசேகரனை போலீஸார் தேடி வருகின்றனர்.