புதுச்சேரியில் கரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு; அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநிலச்செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஆனால், மாவட்ட ஆட்சியர் நிர்வாக திறமையின்மை காரணமாக சுகாதாரம்,வருவாய்த் துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை துறைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது, ஆய்வு மேற்கொள்வது என தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். தமிழகத்தில் கரோனாபரவலை தடுக்க பின்பற்றும் நடவடிக்கைகளைக் கூட பின்பற்றாமல் 55 மணி நேரம் ஊரட‌ங்கு என முதலில் அறிவித்து, அதன் பிறகு பல தளர்வுகளை ஆளுநர் அறிவித்தார்.

இதன் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் குழப்பத்தில் அலைக்கழிக்கப்பட்டனர். பலரும் தங்களது அன்றாட வருவாயை இழந்து தவிக்கின்றனர். ஆளுநர் வாழ்வாதாரத்தை காட்டிலும் வாழ்க்கைதான் முக்கியம் எனக் கூறுகிறார்.

ஆனால் வாழ்க்கையை வாழ வாழ்வாதாரம் முக்கியம் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் ஊரட‌ங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசின்அறிவிப்பின்படி ரேஷன் கார்டு ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக வழங்க வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும் மலிவு விலை உணவு கிடைக்கஏற்பாடு செய்ய வேண்டும். முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

தேவையான தடுப்பு மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் நியமனம்செய்யவும் அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in