கரோனாவால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் நாட்டில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு: குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தொற்றால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலையில் நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன என மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் தெரிவித்தார்.

பழநி அருகே ஆயக்குடியில் திருமணமாகாத பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தபோது பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றது தொடர்பாக மாநில குழந்தை உரிமைகள் பாது காப்பு ஆணையம் விசாரணை நடத்தியது.

ஆணைய உறுப்பினர்கள் ரங்கராஜ், முரளிக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பழநி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீஸாருக்கு ஆணைய உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

விசாரணையின் போது மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி, குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வாளர் செந்தாமரை, ஆயக்குடி இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வீ.ராமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்றது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். இந்த வழக்கை குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும். குழந்தைகள் நல விவகாரங்களை கவனிக்க குழந்தைகள் நலத்துறை தமிழகத்தில் தனியே அமைக்கப்பட வேண்டும்.

கரோனா தொற்றால் பள்ளிகளுக்குச் செல்லமுடியாத நிலையில் நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பது வேதனையாக உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in