

திருநெல்வெலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 30 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டுகிறது. அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரி கடலில் நிலைகொண் டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை காரணமாக, இம்மூன்று மாவட்டங்களிலும் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எனினும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இடை விடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால், 3 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தாமிரபரணி:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, கடனா உட்பட 8 அணைகள் நிரம்பி வழிகின்றன. இவற்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், தொடர் மழையாலும் திருநெல்வேலி தாமிரபரணியில் 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதுவே, ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி நேற்று மாலை நிலவரப்படி 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு சென்றது. இது 40 ஆயிரம் கன அடி வரை உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளம் காரணமாக பாபநாசம் கோயில் முன் உள்ள மண்டபங்கள், திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் உள்ளிட்டவை நீரில் மூழ்கி உள்ளன. பாபநாசம் மலையில் உள்ள முண்டந்துறை பாலம், சேரன்மகாதேவி கீழ்பாலம், மேலப்பாளையம் திருநெல்வேலி டவுனை இணைக்கும் கருப்பந்துறை பாலம், தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முக்காணி - ஏரல் இடையே உள்ள பழைய பாலம் ஆகியவை நீரில் மூழ்கின.
குற்றாலம்:
பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் குற்றாலம் அருவிகளில் நேற்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் குளிக்க தடை நீடிக்கிறது. குற்றாலம் பேரருவியில் ஆர்ச்சை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் 40 நாட்களுக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராட்சத மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் பாரதிநகர், முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்திநகர், தனசேகரன் நகர், ரஹ்மத் நகர், ராம்நகர், அய்யாசாமி காலனி உட்பட சில பகுதிகளில் வெள்ளம் வெளியேற்றப்படவில்லை. அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. அணைகள் நிரம்பியுள்ள நிலையில், 3,100 கனஅடி தண்ணீர் நேற்று உபரியாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. திருவட்டாறு, குழித்துறை, முஞ்சிறையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.