Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தடையை மீறி வியாபாரம்; மார்க்கெட் முழுவதும் இரும்பு தடுப்புகளால் மூடல்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் தடையை மீறி சிலர் கடை அமைத்துள்ளதாக வந்த தகவலின்பேரில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் தடையை மீறி சிலர் வியாபாரத்தில் ஈடுபட்டதால் மார்க்கெட் முழுவதும் இரும்பு தடுப்புகள் அமைத்து நேற்று மூடப்பட்டது.

வேலூரில் பெருகி வரும் கரோனா தொற்றை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதில், வேலூர் நேதாஜி மார்க் கெட் பகுதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் வெவ்வேறு இடங் களுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தர விட்டார்.

அதன்படி, நேதாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த சில்லறை பூக்கடைகள் வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர அரங்கிலும், மொத்த பூ வியாபாரம் ஊரீசு பள்ளி எதிரேயுள்ள மைதானத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்து அங்கு இயங்கி வருகின்றன.

அதேபோல, காய்கறி மார்க்கெட் பெங்களூரு ரோட்டில் உள்ள காலி மைதானத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்நிலையில், சில பூ வியாபாரிகள் வழக்கம்போல நேதாஜி மார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்து, பொதுமக்களை அதிக அளவில் ஒரே இடத்தில் கூட்டி வருவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் சென்றது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேதாஜி மார்க்கெட் பகுதியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, விதி முறைகளை மீறி சிலர் பூ மார்க் கெட் பகுதியில் பூ மற்றும் பூமாலைகளை வியாபாரம் செய்து வருவது கண்டறியப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் வந்ததை அறிந்த சில வியாபாரிகள் அவசர, அவசரமாக கடைகளை மூடினர். உடனே, அனைவரையும் மாநகராட்சி ஊழியர்கள் வெளி யேற்றினர். அப்போது, தற்காலிக இடத்தில் வியாபாரம் செய்ய போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, வெயில் காலம் என்பதால் திறந்த வெளியில் வியாபாரம் செய்வதால் பூக்கள் விரைவாக வாடிவிடுவதால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், நேதாஜி மார்க்கெட் பகுதியிலேயே கரோனா விதிமுறைகளை பின்பற்றி அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையேற்க மறுத்த ஆணையர் சங்கரன், அருகேயுள்ள பழைய மீன் மார்க்கெட் பகுதியில் பாதி இடம் காலியாக இருப்பதாகவும், பூ மார்க்கெட் வியாபார சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதற்கான அனுமதியை பெற்று அங்கு வேண்டுமானால் கடையை நடத்திக்கொள்ளலாம். எந்த காரணத்தை கொண்டும் நேதாஜி மார்க்கெட்டில் கடையை திறக்க அனுமதியில்லை என திட்ட வட்டமாக கூறினார். அப்போது, சிலர் மாநகராட்சி ஆணையர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய மாநகராட்சி ஊழியர்கள் நேதாஜி மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு மருந்துகளை தூவினர். பிறகு, பூ மார்க்கெட் பகுதிக்குள் யாரும் உள்ளே வர முடியாதபடி தகர ஷீட்டுகளை அமைத்து தடுப்புகளை அமைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x