

வெம்பாக்கம் அருகேயுள்ள குண்டி யான்தண்டலம் கிராமத்தில் உள்ள சோமநாதீஸ்வரர் கோயிலில் 10 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தின் பெரிய கிளையை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.
தி.மலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டத்துக்கு உட்பட்ட குண்டியான்தண்டலம் கிராமத்தில் சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் 10 ஆண்டுகள் பழமையான 3 சந்தனமரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன. கோயில் பணியாளர்களால் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த சந்தனமரங்களில் ஒரு மரத்தின் பெரிய கிளையை மர்ம நபர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெட்டி கடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் ஆய்வு செய்த கோயில் தக்கார் சிவராமகிருஷ்ணன், தூசி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், ‘‘மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்ட 10 ஆண்டுகள் பழமையான சந்தனமரத்தின் கிளையை மீட்டுக் கொடுப்பதுடன் திருடியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தூசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.