முகக்கவசம் அணியாமல் வந்தால் பேருந்தில் பயணிக்க அனுமதியில்லை: மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன

வேலூரில் முக்கிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.‌படங்கள்: வி.எம்.மணிநாதன்.
வேலூரில் முக்கிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் காவல்துறை சார்பில் ஒலி பெருக்கி மூலம் கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.‌படங்கள்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

வேலூரில் முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதி இல்லை என அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நேற்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 497 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெருகிவரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தொற்று தடுப்புப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கும், தனி மனித இடைவெளியை பின் பற்றாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக, பேருந்துகளில் பயணிகள் சிலர் பயணம் செய்யும் போது முகக்கவசம் அணியாமல் பயணம் செய்கின்றனர். பேருந்தில் இருக்கை இல்லை என்றாலும் வெகு விரைவாக ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் பேருந்தில் நின்றுக்கொண்டும், படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர். இதைத் தடுக்க வேண்டிய நடத்துநர்களும், ஓட்டுநர்களும் கண்டும் காணாமல் இருப்பதால் கரோனா தொற்று குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘‘நோ மாஸ்க்’’ ‘‘நோ என்ட்ரி’’

இதனை தடுக்க வேலூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ‘‘நோ மாஸ்க்’’ ‘‘நோ என்ட்ரி’’ மற்றும் ‘‘முகக்கவசம் அணியாமல் பேருந்து களில் பயணம் செய்ய அனுமதி இல்லை’’ என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் நேற்று ஒட்டப்பட்டன. மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் அனுமதிக்க வேண்டாம், நின்றுக் கொண்டு பயணிக்க எக்காரணத்தை கொண்டும் அனுமதியில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

காவல் துறையினர் விழிப்புணர்வு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவின்பேரில் வேலூர் மாநகரில் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 25 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை ஒலிபரப்பி கரோனா தொடர்பான ஆலோசனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், வேலூர் கிரீன் சர்க்கிள், மக்கான் சிக்னல், காமராஜர் சிலை, மண்டி தெரு, லாங்குபஜார், மெயின் பஜார், கிருபானந்த வாரியார் சாலை, மூங்கில் மண்டி சந்திப்பு, அண்ணாசாலை, ஆரணி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஒலி பெருக்கி வைக்கப்பட்டு கரோனா தொடர்பான விழிப்புணர்வு பாடல் ஒலிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in