Last Updated : 28 Apr, 2021 07:30 PM

 

Published : 28 Apr 2021 07:30 PM
Last Updated : 28 Apr 2021 07:30 PM

வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேலூர் ஆட்சியர் தகவல்

வேலூர்

மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ளன என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் மையங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர், உள்ளூர் காவல் துறையினர், துணை ராணுவத்தினர் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 அடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு கடந்த 25 நாட்களுக்கும் மேலாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால் வாக்கு எண்ணும் மையத்தில் அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்டத் தேர்தல் பிரிவு செய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில், வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதியில் பதிவான வாக்குகள் காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியிலும், குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) தொகுதிகளில் பதிவான வாக்குகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, காட்பாடி சட்டக்கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சென்ற ஆட்சியர் சண்முகசுந்தரம் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பிறகு, செய்தியாளர்களிடம் ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

"இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்பட உள்ளன. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை, தபால் வாக்குகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, தேர்தல் பார்வையாளர் அறை, வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடத் தேவையான ஏற்பாடுகள் 100 சதவீதம் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் அமரத் தனி இடமும், செய்தி சேகரிக்க வரும் செய்தியாளர்கள் அமர ஊடக மையமும் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க வாக்கு எண்ணும் மேஜைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்ல தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள், கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்குகள், மின்விசிறிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பணிகளும் முடிவடைந்துள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன’’.

இவ்வாறு ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கணேஷ் (வேலூர்), புண்ணியகோட்டி (காட்பாடி), ஷேக்மன்சூர் (குடியாத்தம்), காமராஜ் (கே.வி.குப்பம்), வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், வட்டாட்சியர்கள் பாலமுருகன் (காட்பாடி), ரமேஷ்(வேலூர்), பொதுப்பணித்துறை பொறியாளர் படவீட்டான், காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x