

குன்னூர் வெலிங்டன் ராணுவப் பகுதியில் மூன்று ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கன்டோன்மென்ட் வாரிய அலுவலகம் தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டது.
தமிழகத்தில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் மற்றும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்று வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 43 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், குன்னூர் அருகே, ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அலுவலகம் காலவரையின்றி மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை அலுவலகம் திறக்கப்படாது. பொதுமக்கள் அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வசிக்கும் மாரிமுத்து காலனி, லூர்துபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள், கிருமிநாசினி தெளித்தனர். கன்டோன்மென்ட் அலுவலகத்தில் பணியாற்றும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் வேட்பாளர், முகவர், பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.