Last Updated : 28 Apr, 2021 06:11 PM

 

Published : 28 Apr 2021 06:11 PM
Last Updated : 28 Apr 2021 06:11 PM

திருப்பத்தூர் காய்கறி மார்க்கெட் மே 3-ம் தேதி முதல் இடமாற்றம்: நகராட்சி அதிகாரிகள் தகவல்

திருப்பத்தூர் சக்தி நகரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட், மே 3-ம் தேதி முதல் ஈத்கா மைதானத்தில் இயங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெருகி வரும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த ஒருசில கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி, நகர் பகுதியில் குறுகலான பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர்க் கடைகள், பேன்சி ஸ்டோர்ஸ், ஜவுளிக்கடை, நகை அடகுக் கடைகள் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் திறக்க அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் உழவர் சந்தை தனியார் பள்ளி மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைப் போல, சக்தி நகரில் இயங்கி வந்த தினசரி காய்கறி மார்க்கெட்டையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டையொட்டியுள்ள ஈத்கா மைதானத்தில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஈத்மா மைதானத்தில் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து இன்று ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் சக்தி நகரில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் 135 பேர் கடை நடத்தி வருகின்றனர். காய்கறி மொத்த வியாபாரிகள் 40 பேர். எஞ்சியுள்ளவர்கள் சிறு வியாபாரிகளாக உள்ளனர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உழவர் சந்தை ஏற்கெனவே இடமாற்றம் செய்யப்பட்டு தனியார் பள்ளி மைதானத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈத்கா மைதானத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி ஈத்கா மைதானத்தில் தூய்மைப் பணிகள், கடை அமைப்பதற்கான இட ஒதுக்கீடு 2 நாட்களில் நடைபெற உள்ளன.

வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது. எனவே மே 3-ம் தேதி முதல் ஈத்கா மைதானத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை அங்கு சென்று சமூக இடைவெளியைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். அதே பகுதியில் கரோனா பரிசோதனையும், கரோனா தொடர்பான விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x