

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (ஏப். 27) நிலவரப்படி, 15 ஆயிரத்து 830 பேருக்கு தமிழகம் முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 4,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், மே 2 வாக்கு எண்ணிக்கையின்போதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று (ஏப். 28) மாலை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் திரிபாதி ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.