

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் 3 அடுக்குப் பாதுகாப்புடன், சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, சிசிடிவி கண்காணிப்பு அறை ஆகியவற்றை இன்று (ஏப். 28-ம் தேதி) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் பாஜக மாவட்டத் தலைவர் கே.சிவசாமி, பொதுச் செயலாளர் கே.பி.மோகன், அதிமுக ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன், க.பரமத்தி ஒன்றியக் குழுத் தலைவர் மார்க்கண்டேயன், லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், "தேர்தல் ஆணையம் நேர்மையாகவும், நியாயமாகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவற்றை முழுமையாகக் கடைப்பிடிப்போம். 100 சதவீதத்திற்கு மேல் ஒத்துழைப்பு அளிப்போம்.
அரவக்குறிச்சி தொகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. நாளை (ஏப். 29-ம் தேதி) தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். அதில் ஒரளவு முடிவுகள் தெரியும். பெண்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு தேர்தலில் பெண்களின் மன ஓட்டத்தைக் கணிக்கத் தவறிவிட்டனர். இம்முறை பெண்களின் மன ஓட்டத்தை ஓரளவு சரியாகக் கணித்திருப்பார்கள் என நினைக்கிறேன். எனது கருத்துப்படி அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள பாஜக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைவோம்.
கரோனா 2-வது அலை ஏப். 6 தேர்தல் வரை பெரிய அளவில் இல்லை. அதன்பின்பே வேகம் எடுத்துள்ளது. மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முன்பதிவு இன்று (ஏப். 28-ம் தேதி) தொடங்குகிறது.
அனைவரும் தயங்காமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 0.04 பேருக்கு அதாவது 10,000 பேரில் 4 பேர் என்ற அளவில் கரோனா தொற்று ஏற்படுகிறது. ஊசி போடுவதில் அரசியல் வேண்டாம். கரோனா முழுமையாக விலகிய பிறகு அரசியலை வைத்துக் கொள்வோம்" என்றார்.