

கோடை வெப்பத்தால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அவதிப்படுவதைத் தவிர்க்க, ஒரு தம்பதியினர் தங்களின் நகையை அடகு வைத்து மின்விசிறிகளை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட மருத்துவமனை என்பதால் இங்கு மின்விசிறிகள் இல்லை.
கரோனா காலத்தில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது என்பதால் கோடை காலத்தில் நோயாளிகள் சிரமப்படாமல் இருக்க அரசு சார்பில் 300 மின்விசிறிகள் வழங்கப்பட்டன. எஞ்சியுள்ள படுக்கைகளுக்கும் மின்விசிறிகள் தேவைப்பட்டதால், தன்னார்வலர்கள் மின்விசிறிகளை வழங்கலாம் எனவும், கரோனா காலம் முடிந்தவுடன் அவர்கள் விரும்பினால் மின்விசிறிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையறிந்த கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், நோயாளிகள் பயன்படுத்த ஏதுவாக 100 மின்விசிறிகளை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அளிப்பதற்காக நேற்று எடுத்து வந்தனர். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி டீன் ரவீந்திரன் தம்பதியரிடம் விசாரித்தபோது, கையில் பணம் இல்லாததால் நகையை அடகு வைத்து ரூ.2.20 லட்சம் செலவில் மின்விசிறிகளை வாங்கி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வேண்டுமானால் 4,5 மின்விசிறிகளை மட்டும் அன்பளிப்பாகக் கொடுங்கள். தாங்கள் கஷ்டப்படும் சூழலில் நகையை அடகு வைத்துக் கொடுக்க வேண்டாம் என டீன் ரவீந்திரன் அறிவுரை கூறியுள்ளார்.
அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்த தம்பதியினர், நாங்கள் கொடுத்துவிட்டுதான் போவோம் எனப் பிடிவாதமாக இருந்துள்ளனர். உடனே, மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் டீன் தகவல் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர், “மின்விசிறிகளைப் பெற்று நோயாளிகளுக்கு வழங்குங்கள். அவர்கள் மனது வருத்தப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நூறு மின்விசிறிகளையும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி டீன் பெற்றுக்கொண்டார்.
தங்களின் பெயர், புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்றுகூறித் தம்பதியினர் உதவிய சம்பவம் அங்கிருந்தோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.