பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக; திருச்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக; திருச்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
Updated on
1 min read

பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த 22-ம் தேதி இளைஞர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ (27). குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், ஏப்.22-ம் தேதி பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார். மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிறைக்குள்ளேயே முத்துமனோ கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முத்துமனோ சிறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், "பாளையங்கோட்டை சிறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

முத்துமனோ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். முத்துமனோ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்தக் கொலை வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியை உடனே நியமிக்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தேவேந்திர குல வேளாளர் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ம.அய்யப்பன், மாநிலப் பொதுச் செயலாளர் கோ.சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in