திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்: வைகோ

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என, வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று (ஏப். 28) வெளியிட்ட அறிக்கை:

"திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததால், 2016ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.

அங்கே, 8 மணி நேரத்தில், 1,000 கியூபிக் மீட்டர், அதாவது 150 உருளைகள் ஆக்சிஜன் ஆக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலை நேரங்களில் குறைந்தது 400 உருளைகள் ஆக்சிஜன் ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது.

எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், ஆக்சிஜன் ஆக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in