

பிரபலங்கள் எல்லாம் தங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அதை வெளிப்படையாகச் சொல்லி, தங்களைச் சார்ந்து இருந்தவர்களையும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை வெளியில் யாருக்கும் சொல்லவில்லையாம். அறிகுறிகள் தென்பட்டதுமே சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டாராம். அரசல் புரசலாக விஷயத்தைக் கேள்விப்பட்ட டெல்டா பத்திரிகையாளர்கள், வைத்திக்கு நெருக்கமானவர்களுக்கு போன் போட்டு அக்கறையுடன் விசாரித்தார்களாம். அவர்களோ, “அப்படியெல்லாம் ஏதுமில்லையே” என்று அப்பாவித் தனமாய் மறுத்து விட்டார்களாம். பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து தொடர் விசாரணைகள் வரவும், “லைட்டா சிம்டம்ஸ் இருந்துச்சு” என்று உண்மையை ஒத்துக்கொண்டவர்கள், “செய்தி கிய்தி போட்டுடாதீங்கண்ணே...” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்களாம். சிகிச்சை முடிந்து ஊர் திரும்பிய வைத்தியைப் பார்க்க அதிமுக பொறுப்பாளர்கள் சிலர் படைகிளப்பினார்களாம். “அதெல்லாம் இப்ப யாரும் என்னைய பார்க்க வரவேண்டாம்” என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டாராம் வைத்தி.