Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா பெருந்தொற்று: இந்தியர்கள் செய்ய வேண்டியவை என்ன?- அமெரிக்காவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரின் 10 பரிந்துரைகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மருத்துவர் பிரியா சம்பத்குமார். இவர் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ரோசெஸ்டர் நகரில் உள்ள மேயோ கிளினிக்கில் தொற்றுநோய் நிபுணர் மற்றும் தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் கடந்த ஓராண்டு காலமாக கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைஅளித்து வருகிறார். இந்தியாவில் கரோனாவின் தாக்கத்தை குறைக்க மக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து அண்மையில் வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. எனவே, இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை குறைக்க இந்தியர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்னும் ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.

தடுப்பூசி அவசியம் போட வேண்டும்

1. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகள் தொற்று ஏற்படுவதை முற்றிலும் தடுத்து நிறுத்தமுடியாமல் இருக்கலாம். ஆனால்,தொற்று தீவிரமடைதல், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை, மரணம்ஆகியவற்றை நிச்சயம் தடுக்கும்.

2. தயவு செய்து கூட்டங்களைத் தவிர்த்து விடுங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தால் கண்டிப்பாக முகக் கவசம்அணியுங்கள். முகக் கவசம் தொற்று அபாயத்தைப் பெருமளவில் குறைக்கிறது. அதோடு தொற்று இருப்பவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பும் முகக் கவசம் அணிவதன் மூலம் கணிசமாகக் குறைகிறது.

முகக் கவசம் கரோனா பரவலை தடுக்கும்

3. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் முகக் கவசம் அணியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உங்களுக்கு லேசான தொற்று ஏற்பட்டிருந்தால், உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதை முகக் கவசம் தடுக்கும்.

4. காய்ச்சல், வாசனை - சுவை இழப்பு, இருமல், உடல்வலி போன்ற தொற்று அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் உள்ள மற்றவர்களிடமிருந்து விலகி தனியாக இருங்கள். வீட்டுக்குள் முகக் கவசம் அணிந்துகொள்ளுங்கள்.

5. கரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்துகொள்ளுங்கள். சோதனை முடிவு வரும்வரை வீட்டுக்குள்ளேயே இருங்கள்.

6. அறிகுறி இருப்பவர்களுக்கு பாரசிடமால் போன்ற காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வது உள்ளிட்ட சிகிச்சை தேவைப்படலாம். நிறைய திரவ உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

7. தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் எந்த சிக்கலும் இல்லாமல் தொற்றிலிருந்து மீண்டு விடுவார்கள். குறைந்த எண்ணிக்கையிலானவர்களே மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டியிருக்கும்.

8. உங்களுக்கு தொற்று உறுதியாகிவிட்டாலும் அறிகுறி இல்லாமலிருந்தால், உடல்நல பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். மீறிச் செல்வதால், மருத்துவமனை படுக்கை, அவசியமாகத் தேவைப்படும் ஒருவருக்கு கிடைக்காமல் போகக் கூடும்.

ஆக்சிஜன் அளவு முக்கியம்

9. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் ஆக்சிஜன் அளவைக் கணக்கிடும் கருவியைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 92 சதவீதத்துக்கு கீழ் இறங்கியிருப்பதாக கருவியின் மூலம் தெரியவந்தால், உங்களுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட வேண்டும். இது தொடர்பான மருத்துவ சிகிச்சைகளும் தேவைப்படும். எனவே, ஆக்சிஜன் அளவு 92 சதவீதத்துக்கு கீழ் இறங்கினால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.வீட்டிலிருந்தபடியும் ஆக்சிஜன் செலுத்திக்கொள்ளலாம். வீட்டில் அதற்கான வசதிகள் இல்லை என்றால், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

10. ‘ரெம்டெசிவிர்’ போன்ற மருந்துகள் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன.இந்த மருந்துகள் செலுத்தப்படுவதற்காகவே, கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பலர், தாங்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். பொதுவாக இந்த மருந்துகள் தேவையற்றவை. இவை தொற்று ஏற்படுத்தும் விளைவுகளில் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. உங்கள் உடலின்ஆக்சிஜன் அளவு குறையவில்லை என்றாலும், இந்த மருந்துகள் செலுத்தப்படுவதற்காகவே மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

இவ்வாறு மருத்துவர் பிரியா சம்பத்குமார் கூறியுள்ளார்.

இவரின் முழு விளக்கத்தையும் https://www.youtube.com/watch?v=aVaoiekDwIA என்ற யூடியூப் லிங்க்-கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x