

மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் வெண் பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று இறங்கினார். இதை பக்தர்கள் காணும் வகையில் கோயில் இணையதளங்களில் ஒளிபரப்பப்பட்டது.
வழக்கமாக மதுரை சித்திரை திருவிழா என்றால், கள்ளழகர் மதுரை புறப்பாடு, வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளல், மூன்று மாவடியில் பக்தர்கள் திரண்டு அழகரை அழைக்கும் எதிர்சேவை, அடுத்த நாள் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல், பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் பல லட்சம் பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் இறங்குதல் என கள்ளழகர் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் கரோனா தொற்று 2-வது அலையால் கோயில் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் பங்கேற்பு இன்றி கோயில் வளாகத்திலேயே ஆகம விதிப்படி, அழகர்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.23-ம் தேதி சுவாமி புறப்பாடுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்காக கோயில் வளாகத்திலேயே செயற்கையாக தொட்டி அமைத்து பாலிதீன் தரை விரிப்பு அமைத்து வைகை ஆற்று தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.
அதனையொட்டி 5-ம் நாளான நேற்று காலையில் செயற்கை வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலை சாற்றுதல் நடைபெற்றது. பின்னர் ஆடி வீதியில் வலம் வந்த கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் நேற்று காலை 9.30 மணியளவில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வைகை ஆற்றில், வெண்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் இறங்கினார். பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் இணையதளம், யூ-டியூப் ஆகிய சமூக வலைதளங்களில் ஒளிபரப்பானது.
உற்சவ சாந்தி திருமஞ்சனத்துடன் மே 2-ல் விழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.