

அடையாறில் உள்ள விஎச்எஸ் ரத்த வங்கிக்கு புதிய கட்டிடம் கட்ட எல்ஐசி நிறுவனம் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
எல்ஐசி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதற்காக, கடந்த 2006-ம் ஆண்டு பொன்விழா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலம், வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதுவரை, ரூ.6.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை தரமணியில் உள்ள விஎச்எஸ் ரத்த வங்கிக்கு தற்போதுள்ள கட்டிடத்தின் மேல் புதிதாக ஒரு மாடி கட்ட ரூ.25 லட்சத்தை எல்ஐசி நிறுவனம் வழங்கி உள்ளது. தரமணியில் நேற்று இதற்காக நடந்த பூமி பூஜையில் எல்ஐசி மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் மற்றும் விஎச்எஸ் ரத்த வங்கி நிர்வாகிகள் பங்கேற்றனர்.