Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

சேலம் மாவட்டத்துக்கு வளம்சார் வங்கிக் கடன் ரூ.7976.82 கோடி: நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் தகவல்

சேலம்

நடப்பு நிதியாண்டுக்கான (2021-22) வளம்சார் வங்கிக்கடன் திட்டம் சேலம் மாவட்டத்துக்கான கடன் திறனை ரூ.7, 976.82 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளது என நபார்டு உதவிப் பொதுமேலாளர் பாமா புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ரூ.1.417.36 கோடியில் நடைபெற்றுவரும் 310 கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்களில், இதுவரை ரூ.492.90 கோடி வழங்கப்பட்டுள்ளன.

2020-21-ம் ஆண்டு தலைவாசலில் சர்வதேச தரத்தில் ரூ.416.23 கோடி கடனில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி திட்டம் மற்றும் ரூ.525.75 கோடி கடனில் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர் மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிகள் மற்றும் 778 கிராமப்புற வாழ்விடங்களுக்கான கூட்டு்க் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு நபார்டு வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ 816.90 கோடியை நபார்டு வங்கி மறுநிதியளிப்புக் கடன் வழங்கியுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்துக்கு ரூ. 403.84 கோடி மறு நிதியளிப்புக் கடனை நபார்டு வங்கி வழங்கியுள்ளது.

ரூ.172.31 லட்சம் மானியத்தில் சிஎஸ்ஆர் உதவியுடன் செயல்படுத்தி முடிக்கப்பட்ட நீர்வடிப்பகுதி திட்டம், ரூ.67.28 லட்சம் மானியத்தில், மேச்சேரி வட்டாரத்தில் 5 கிராமங்களை உள்ளடக்கி ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கெங்கவல்லி வட்டாரத்தில், ரூ.7.89 கோடி மானியத்தில் பச்சைமலை ஒருங்கிணைந்த மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டமும், ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி வட்டாரங்களில் ரூ.4.66 கோடி மானியத்தில் பைத்தூர் கூடமலை ஒருங்கிணைந்த மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

2020-21 ஆம் ஆண்டில், சுய உதவிக் குழுக்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.98 ஆயிரம் மானிய உதவியில், சுய உதவிக் குழுக்களை சார்ந்த 90 பெண்களுக்கு ஜாம் மற்றும் மசாலா பொருட்களை தயாரிக்கும் பயிற்சி, சமுதாய நாற்றங்கால் பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை உள்ளடக்கிய 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை இதுவரை ரூ.1.41 கோடி மானிய உதவி வழங்கப்பட்டுள்ளன. மேலும், இளம்பிள்ளை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்த 500 விசைத்தறி நெசவாளர்களை கொண்டு, பண்ணைசாரா உற்பத்தியாளர் நிறுவனத்தை ஊக்குவித்து இதுவரை ரூ.26.85 லட்சம் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூட்டு பொறுப்பு குழு கடன் ஊக்கத்தொகையாக ரூ.15 லட்சம் மானிய உதவியை நபார்டு வங்கி அனுமதித்துள்ளது. கூட்டுப் பொறுப்பு குழுக்களை வழி நடத்தும் நிறுவனங்கள் மூலமாக 2,966 கூட்டுப் பொறுப்பு குழுக்கள் ரூ.80.97 கோடி கடனுடன் தமிழ்நாடு கிராம வங்கி (2,179 குழுக்கள்), சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (2,179 குழுக்கள்) மற்றும் வணிக வங்கிகள் (2,179 குழுக்கள்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சந்தியூர், வேளாண் அறிவியல் நிலையத்துக்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான நவீன தொழில் நுட்பங்களை செயல்படுத்தவும் அவற்றைப் பரப்பவும் நபார்டு வங்கி 1.74 லட்சம் நிதியுதவியை ஒதுக்கியுள்ளது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு நடமாடும் ஏடிஎம் வேன் வாங்க ரூ.15 லட்சம் மானிய நிதி உதவி அளிக்கப்பட்டது. இத்திட்டங்களின் அடிப்படையில், 2021-22 நிதி ஆண்டுக்கான வளம்சார் வங்கிக்கடன் திட்டம் சேலம் மாவட்டத்துக்கான கடன் திறனை ரூ.7, 976.82 கோடியாக நபார்டு வங்கி மதிப்பிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x