

பீப் பாடல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிம்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு சார்பில் அவரது வழக்கறிஞர் தியாகேஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இசைப்பிரியரான சிம்பு பல் வேறு இசை ஆல்பங்களை வெளி யிட்டுள்ளார். யாரோ சில மனசாட்சியில்லாத விஷமிகள் சிம்புவின் வெளிவராத பாடலைத் திருடி பெண்களை கொச்சைப் படுத்தும் வார்த்தைகளைப் பயன் படுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் சிம்பு புகார் கொடுத்துள்ளார். புகார்தாரரும் இந்தப் பாடலை சிம்புதான் வெளியிட்டார் என தனது புகாரில் குறிப்பிடவில்லை. அடிப்படை, ஆதாரமற்ற புகார் இது. வழக்குப்பதிய முகாந்திரமே இல்லாமல் சிம்பு மீது தகவல் தொழில்நுட்ப சட்டம்-2000ன் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிம்பு பெண்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர். இந்த பாடலில் யாரோ ஒரு விஷமி செய்த இடைச்செருகலுக்கும் சிம்புவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எந்த பீப் பாடலையும் சிம்பு வெளியிடவில்லை. எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதி்ல் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.சுப்பையா, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.